தனியார் வைத்தியசாலை ஒன்றில் ETU அவசர முதலுதவி பிரிவு உரியமுறையில் இயங்காமையினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் இந்த உயிரிழப்புக்கு குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகமே காரணம் என குற்றம் சுமத்தி உறவினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம்(08) திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2ஆம் திகதி திருகோணமலை பாலையூற்று – பூம்புகார் பிரதேசத்தில் மயக்கமுற்ற நிலையில் (34-வயது) நபரை குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அவசர முதலுதவி பிரிவுக்கு (ETU) அனுமதிக்க சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர், இதனைத்தொடர்ந்து  நபரை திருகோணமலை தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்நபர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு குறித்த நபர் உயிரிழந்தமைக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில் நேற்றையதினம்(08) மரணத்திற்கான வைத்திய சான்றிதழ் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்ட போது குறித்த நபர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

“உயிரிழந்த நபரை முன்பே தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து முதலுதவி செய்திருந்தால் அந்த நபரை காப்பாற்றி இருக்கலாம்” எனவும் இவ்வாறு “உயிரிழந்த நபரின் மரணத்திற்கு தனியார் வைத்தியசாலையே காரணமெனவும்” வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சி பலகையில் அவசர முதலுதவி பிரிவு (ETU) 24 மணித்தியாலமும் இயக்கத்தில் உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த தனியார் வைத்தியசாலையில் அவ்வாறு அப்பிரிவு செயற்பாட்டில் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளும் உடன் அகற்றப்பட வேண்டும் எனவும் குறித்த தனியார் வைத்தியசாலை மக்களை சிரமங்களுக்குள்ளாக்குவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து  அவ்விடத்திற்கு சமூகமளித்த உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலை நிர்வாகத்துடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து  வைத்தியசாலை நிர்வாகத்தினரினால் அனைத்து பிரிவுகளும் காட்சி பலகையில் இருந்து முற்றாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here