கொழும்பு – ஆமர் வீதி சந்தியில் எரிவாயு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்துள்ளனர்.
இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போதும், மக்கள் தொடர்ச்சியாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் பொலிஸார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸார், போராட்டக்காரர்களை வீதி ஓரத்தில் சென்று போராட்டத்தை முன்னெடுக்குமாறு தெரிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அதற்கு உடன்படவில்லை.
உங்களால் என்ன முடியுமோ செய்யுங்கள் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் வீதியின் சந்தியில் கூடாரம் அமைத்து வருவதுடன், சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை பின்வாங்கப் போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – ஆமர் வீதி சந்தி நேற்று முதல் பல மணித்தியாலங்களாக மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குறித்த சந்தியின் நான்கு வீதிகளையும் மூடி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவ்வீதியூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்தி வரும் நிலையில், குறித்த பகுதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நூற்றுக்கணக்கான எரிவாயு கொள்கலன்களை வைத்துள்ள குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தற்போது பொலிஸ் அதிகாரியொருவர் கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில் தமக்கு எரிவாயு கிடைக்குமானால் குறித்த சந்தியை தாம் விடுவிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த நிலையில், இன்னும் ஒரு மணித்தியாலத்தில் எரிவாயு கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளார்.