நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஹர்த்தாலுக்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளதுடன், பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
அத்துடன் பொதுப் போக்குவரத்தும் பகுதியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் முடங்கியுள்ளன.
வவுனியா
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச்சோடியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
அதன்படி நாடு பூராகவும் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்பதால் பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மலையகம்
பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தினை வெளியேறக் கோரியும் ஆயிரம் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக இன்று மலையகப்பகுதிகளில் அனைத்து சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் நகரங்கள் தோட்டங்கள் மயான அமைதி நிலவுகிறது.
பொது போக்குவரத்து மற்றும் பாடசாலை சேவைகள் இடம்பெறாததன் காரணமாகவும்,பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகச் செயலிழந்தன.
தபால், வங்கி, புகையிரத சேவைகள் ஆகியனவும் இடம்பெறவில்லை.தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் பூட்டப்பட்டிருந்தன. மலையக நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தன.
வாகன போக்குவரத்து இல்லாததன் காரணமாகவும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாகவும் நகரங்களில் சனநடமாற்றமும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன.
ஹட்டன் பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனினும் ஒரு சில தனியார் பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துகளும் சேவையில் ஈட்டுப்பட்டிருந்தன.