புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.

அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இன்று காலை ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here