அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறக்கூடும் என்ற காரணத்தினால் இப்போதைக்கு அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதாகக் கூறிக்கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் ஊடாக மாகாணசபைத் தேர்தலைக் காலம் தாழ்த்தும் திருத்தம் கொண்டு வரப்பட்டது போன்று இந்த சந்தர்ப்பத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சூழ்ச்சிகள் இடம்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா போன்ற சக்திகள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி வரும் நிலையில், அரசியல் அமைப்பினை திருத்துவது மீசையில் தீப்பிடித்த வேளையில் அதில் சுருட்டு பற்ற வைப்பதற்கு நிகரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.