நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இஜேசு கிறிஸ்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாகக் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் உள்ள அனைத்து திருச்சபைகளிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் நீங்கி உயிர்த்த இயேசுபிரான் நாட்டை ஆசீர்வதிக்க வேண்டும் என வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

முறிகண்டி தென்னிந்தியத் திருச்சபையின் வழிபாடு இன்று காலை இடம்பெற்றது. திருப்பலியை பிதா ஜோன் தேவசகாயம் ஒப்புக் கொடுத்தார்.

செய்தி – யது

மன்னார்

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகக் கலந்து கொண்டனர். திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தைச் சூழ பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றது. இன்று காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி – ஆசிக்

யாழ்ப்பாணம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இதனை யாழ்.மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன்ராஜ் நடாத்தி வைத்தார். தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று “யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்” என்னும் தலைப்பிலான சிறப்புக் கூட்டுப்போதனையும் இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்டத்திலிருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி – கஜி

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நேற்றிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள். இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியிலுள்ள மென்ரசா வீதியில் புதிதாக சீயொன் தேவாலயம் அமைக்கப்பட்டு அங்கு இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 93 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் தேவாலயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்தி வேண்டி ஆராதனையில் ஈடுபட்டனர்.

சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – குமார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here