அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் தனது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் மிக மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ள நேரத்தில் கமத்தொழிலாளர்களின் பயிர் செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கமத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நெல் அறுவடை பெரியளவில் குறைந்துள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய பிரச்சினைகள் காரணமாக முழு சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து தட்டுப்பாடு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து இல்லாத காரணத்தினால், மருத்துவமனைகள் மூடப்படுகின்றன.
இவ்வாறான நிலைமையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதுடன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோருகின்றனர். இவ்வாறான நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும், மக்களுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும். இப்படியான சூழ்நிலையில், நாட்டில் மிகவும் பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் நாடு சர்வதேச ரீதியில் அந்நியப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, நாடு, மக்களுக்கு மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் நன்மை தரும் விடயமாக இருக்காது.
நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும். எனது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும்.
அதனூடாக நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியம் என்றார்.