உக்ரைன் காவல்துறை கட்டடம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கார்கிவில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடம் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான மறுநாள் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை கட்டடம் கடுமையாக சேதமடைந்து தீப்பிடித்து எரியும் காணொளியை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இந்த காட்சிகள் உக்ரைனின் உள்துறை அமைச்சின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோவால் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை ரஷ்ய துருப்புக்கள் நகரத்திற்குள் நுழைந்து உள்ளூர் மருத்துவமனையைத் தாக்கியதாகவும் தொடர்ந்தும் போர் இடம்பெற்றுவருதாகவும் உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
குறித்த ஏவுகணை தாக்குதலால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ரஷ்யாவை உக்ரைன் அதிபர் கடுமையாக சாடியுள்ளதுடன், இது ஒரு ‘போர் குற்றம்’ என்றும் தெரிவித்துள்ளார்.