இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள நிலையில் இவ்வருடம் இதுவரையில் 9609 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 48 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு வைரஸின் மாற்றத்தால் அறிகுறிகள் காட்டும் நேரம் குறைவடைந்துள்ளது. இதனால் காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அவர் கேட்டுள்ளார்.
எனினும், காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி பாரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.