நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கட்டப்பாடுகள் போலியானவை என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வீதிகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன, தையல் கடைகள் கூட திறந்து காணப்படுகின்றன. கோவிட் பரவலும் குறைவடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும்,
கடந்த சில நாட்களில் இடம்பெறும் விடயங்களை பார்த்த பின்னர் வாரத்திற்கு வாரம் நீடிக்கப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் போலியானவை என தெரிவிப்பதில் தவறில்லை.
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி விட்டதாக அதிகாரிகள் எவ்வளவு தூரம் தம்பட்டமடித்துக் கொண்டாலும் வீதிகளுக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசலையும் ஒவ்வொரு சந்தியிலும் கடைகள் திறந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இங்கு இடம்பெறுவது பொது மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை இது வேடிக்கையானது. ஒரு சிறுவனால் கூட இதனை புரிந்து கொள்ள முடியும். நாட்டின் ஒவ்வொரு வீதியிலும் சந்தியிலும் இது தென்படுகின்றது.
அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புபட்ட வாகனங்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றால் கொழும்பின் அனைத்து வீதிகளும் எவ்வாறு போக்குவரத்தினால் நிரம்பி வழிகின்றன என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மருந்தகங்கள் மாத்திரம் திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய கடைகளும் திறந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது வெறும் வார்த்தை அளவிலேயே உள்ளதால் பொது மக்களும், நாடும் மேலும் துயரத்தை சந்திக்கின்றது என்பதையும் மக்கள் நாளாந்தம் கோவிட் தொற்றுக்கு பலியாகிக் கொண்டிருகின்றனர் என்பதையும் ஏன் அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்ற ஆழமான கரிசனை எழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.