சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் விலைகள் தொடர்பில் ஆராய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமை பற்றி விரிவாக ஆராயவுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலக சந்தையில் காணப்பட்ட விலைகளுக்கு அமைய ஒரு சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 540 ரூபாயால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வேகம்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கோவிட் பரவல் அதனுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பயணக் கட்டுப்பாடுகளால் மக்கள் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வருவாய் இல்லாத காரணத்தினால், மக்கள் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் நள்ளிரவு எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
தற்போது சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டால், மக்களின் வாழக்கை சுமை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.