வவுனியாவில் கோவிட் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 5 தனியார் நிதி நிறுவனங்கள் இன்று சீல் வைத்து மூடப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மட்டும் அரசாங்கத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு தலைமையிலான பொலிஸ் அணியினரும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையிலான சுகாதாரப் பிரிவினரும் வவுனியா நகரில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அரசாங்கத்தின் கோவிட் சுகாதார விதிமுறைகளை மீறி பயணத்தடை காலத்தில் தனியார் நிதி நிறுவனங்களை திறந்து மக்களை அழைத்து நிதி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிதி நிறுவனங்கள் சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டன.
வவுனியா பசார் வீதியில் இரண்டு நிதி நிறுவனங்களும், முதலாம் குறுக்கு தெருவில் இரண்டு நிதி நிறுவனங்களும், புகையிரத நிலைய வீதியில் ஒரு நிதி நிறுவனம் என 5 நிதி நிறுவனங்கள் இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் பல வர்த்தக நிலையங்களும் கடந்த சில நாட்களாக சீல் வைத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.