எமது பயணம் தேசியத்தினூடாகவே தொடரும். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிமுதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு, நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடைநடுவில் பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, முதல்வரால் சபை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எமது பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.

ஆனால், எப்போதும் தேசியத்தினூடாகவே எமது பயணம் தொடரும். ஆனால் சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

மேலும், எங்களோடு இணைந்து செயற்படக் கூடிய புதிய முதல்வரொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியினூடாக வரும்போது நாங்கள் எங்கள் நூறு வீத ஆதரவினை வழங்கி அவருடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் மாநகரசபையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்ற பல கருத்துக்கள் முகந்தெரியாத முகநூல்கள் வாயிலாக பரவிக் கொண்டிருக்கின்றது. விடயம் என்னவென்றே தெரியாமல் அவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களுக்காகவே சேவை செய்வதற்கென வந்திருப்பவர்கள். மக்களுக்காவே நாங்கள் செயற்படுவோம் தனிநபருக்காக செயற்பட மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here