மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் விரைவில் விடுதலையாகவுள்ள மற்றும் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாத கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மற்றும் சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஆகிய காரணங்களினால் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிலர் மரணித்திருப்பதுடன், பலர் காயமடைந்துள்ளமை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த சம்பவத்தின் அடிப்படை மற்றும் பின்னணிக் காரணிகள் தொடர்பிலும் விசாரணைகளின்போது அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

மஹர சிறைச்சாலை சம்பவம், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமது பாதுகாப்புக் குறித்து சிறைக் கைதிகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

தற்போதுவரை நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து குறித்தளவான சிறைக்கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையைக் கையாள்வதற்கு நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவிக்கும் தமது கடப்பாட்டை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதனைச் செய்யத் தவறுவதென்பது மேலும் பல கைதிகள் தொற்றுக்கு உள்ளாவதற்கும் சிறைச்சாலைகளுக்கும் மோதல்கள் அதிகரிப்பதற்குமே வழிவகுக்கும்.

எனவே சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் விரைவில் விடுதலையாகவுள்ள மற்றும் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தாத கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்ளடங்கலாக அனைத்து சிறைக்கைதிகளுக்கும் பாரபட்சமற்ற சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கப்பெறுவதனையும் உரிய அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here