திருகோணமலை மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.மேலும் ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் திருகோமணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றிவருகின்ற நிலையில்,கொழும்பில் உள்ள தனது தாயாரின் பிறந்தநாளுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர், வைத்தியசாலை விடுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வைத்தியருடன் தங்கியிருந்த இன்னுமொரு வைத்தியருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 19 பேருக்கு பி சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 2207 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 834 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆறு கொரோனா தொற்றாளர்களும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் மூன்று பேரும்,உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும் தம்பலகாமத்தில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து உடனடியாக பொலிசாருக்கு அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்துமாறும் தேவையற்ற விதத்தில் மக்கள் நடமாட வேண்டாம் எனவும் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
