இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் குருநாகல் நகர சபை பகுதியிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகின்றது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கடந்த வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால், வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்துவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
