மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 67 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை – மூதூர் பகுதியில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 12 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆயிரத்து 321 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 200 இற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ளன.

யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுமார் 2 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 270 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பேணாமல் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 70 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 86 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் அதில் 51 பேர் கொழும்பு மாநகரசபை அதிகார பகுதிக்கு சொந்தமான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான 13 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்லை பகுதியிலும் புதிதாக 11 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 28 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதுடன் அங்கு இதுவரை 49 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் புதிதாக 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 506 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 5 ஆயிரத்து 638 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் அண்மையில் கொவிட் 19 தொற்றுறுதியான பெரும்பாலானோர் தமது பிரதான தொழிலுக்கு மேலதிகமாக மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மீகார ஏபா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினரை புறக்கணித்து குறித்த தரப்பினர் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 66 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மாவட்டத்தில் 8 வைத்தியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 707 பேர் தனிமைப்படுததப்பட்டுள்ளனர்.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் நேற்று முதல் தங்குமிட வசதிகள் உள்ள அனைத்து விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கேகாலை மாட்டத்தில் உந்துகொட மற்றும் ரம்புக்கன ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக வரக்காபொல வைத்தியசாலையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நுவரெலிய பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்ட 15 பேர் அவர்கள் தங்கியுள்ள விருந்தகங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 28, மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறி மாற்று வீதிகளை பயன்படுத்தி அவர்கள் இவ்வாறு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை திணைக்களம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த கஞ்சிய முனையத்தால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here