கொள்ளுப்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமண நிகழ்வு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தௌிவுபடுத்தினார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இன்று காலை திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கமைய, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
விசாரணையின் போது 35 பேர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், குறித்த ஹோட்டலின் முகாமையாளர் மற்றும் திருமண நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
மேல் மாகாணத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் திருமண நிகழ்வுகள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.