மேல்மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 33 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஒருவருக்கு முன்னதாக தொற்றுறுதியானது.

இந்தநிலையில், அவருடன் தொடர்புடைய ஒருவருக்கு வாழைச்சேனை – கோரளைப்பற்று மத்திய பகுதியில் இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

மற்றைய நபர் கொழும்பில் இருந்து நோய் அறிகுறிகளுடன் பட்டிப்பளைக்கு சென்றிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் கொவிட்19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

அதேநேரம் கொழும்பில் பணிபுரிந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு பிரவேசிக்கும் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொட்டகலை – டிரைட்;டன் பிரிவு தோட்டத்தில் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ் ராகவன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 586 பேரில் அதிகளவானோர் நீர் கொழும்பு சுகாதார வைத்திய பரிவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பலாங்கொடை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படும் எனவும் பலாங்கொடை நகர சபையின் தலைவர் சாமிக்க ஜயமினி விமலசேன தெரிவித்தார்.

இதுதவிர, மேல் மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் ஒரு காவற்துறை அதிகாரிக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும், நான்கு காவற்துறை அதிகாரிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்

அதேநேரம், கொவிட்19 தொற்றுறுதியான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை விசாரணை பிரிவில் கடமையாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரி ஆணைக்குழுவில் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்திற்கும் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here