ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடப்போவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழுவால் மட்டுமே தீர்மானிக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு புதிய தலைவரை நியமிக்க முற்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை தழுவியது. இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்திருந்தார்.
இதற்கமைய கடந்த மாதம் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு இரகசிய வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் ருவான் விஜேவர்தன புதிய பிரதி தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.