தனக்கு ஒரு மாத காலத்துக்குள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை வழங்காது போனால் தான் கடுமையான தீர்மானமொன்றுக்கு செல்லவுள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஆண்டிகம, சியம்பலாவெவ பிரதேச மக்களுக்கு கம்பெரலிய திட்டத்தின் கீழ் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் திருப்புமுனைக்குக் காரணமாக ரங்கே பண்டாரவே பேசப்படுகின்றார். இருப்பினும், தற்பொழுது அமைச்சரவை நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இதுவரையில் ரங்கே பண்டாரவிற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இல்லை.
நான் நீர் வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஜப்பான் சென்றிருந்தேன். அதன்போது தான் நாட்டில் அத்தனையும் நடந்தேறியது. அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமையின் போது ஸ்ரீ ல. சு.க.யின் முக்கிய நபர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கட்சியை விட்டும் வருமாறு கூறினார். அமைச்சுப் பதவியும், 50 கோடி ரூபா பணமும் தருவதாகவும் கூறினார்.
அந்த பதவிகளுக்காகவும் நான் கட்சியை விட்டும் செல்லவில்லை. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பேரம் பேசிய இரகசியத்தை முதுகெலும்புள்ளவனாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவன் நான் தான். இந்த வெளிப்படுத்தல் தான் ஐ.தே.க.யின் அரசியல் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.