இலங்கைக்கும், கேரளா- கொச்சினுக்கும் இடையிலான விமானச் சேவைகள் யாவும் மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் 50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த 8ம் திகதி முதல் கடும்மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான அணைகளின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள பானாசுரா சாகர் அணையும் நேற்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நேற்றைய தினம் வயநாடு மாவட்டத்தில் குறிச்சயா, மக்கி மலை, தாமரச்சேரி மலைப்பாதை ஆகிய இடங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும்மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டமான கொச்சியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால், கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதனால், விமான சேவை முடங்கியுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை விமானசேவைகள் கொச்சின் விமான நிலையத்தில் இருக்காது என்றும் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விமான நிலைய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here