இலங்கையில் முதல் தடவையாக சுற்றுலாத்துறையை மையப்படுத்திய நட்பு ரீதியிலான முச்சக்கர வண்டி சேவையொன்றை நாளை (30) கொழும்பில் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

நாளை மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இதற்காக வேண்டி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை நடைபெறும் நிகழ்வின் போது சுற்றுலாத் துறையில் இணைத்துக் கொள்ளும் முச்சக்கர வண்டிகளின் கண்காட்சி ஓட்டமொன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  இவ்வாறு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சியும், அதன் பின்னர் அடையாள அட்டை ஒன்றும், விசேட பதிவு இலக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஏற்ப இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாக வெளிநாடுகளிலுள்ள பொருளாதார வசதி குறைந்தவர்களே வருவதாகவும் இதனால், நாட்டுக்கு அன்னியச் செலாவணி கிடைப்பது குறைவடைந்துள்ளதாகவும் தற்போதைய பிரதமர் கடந்த அரசாங்கத்தில் எதிர்க் கட்சியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். இதனால் பெரும் செல்வந்தர்களை இந்நாட்டுக்குள் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது அரசாங்கம் வந்தால் அதனை சிறப்பாக செய்வோம் எனவும் பிரதமர் அன்று கூறியிருந்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டி வசதி செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றால், சொகுசு வாகனத்தில் செல்ல வசதியில்லாத சுற்றுலாப் பயணிகளா இந்நாட்டுக்கு இப்போதும் வருகை தருகின்றார்கள் என்ற கேள்வி, பிரதமர் எதிர்க் கட்சியில் உள்ளபோது கூறிய வார்த்தை நினைவில் உள்ள சகலரிடத்திலும் எழும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here