நாட்டில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடம் அரசியலமைப்பிலுள்ள சரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து விடக் கூடாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆனமடுவ மஹகுபுக்கடவல, கொரகஹயாயவிலுள்ள விகாரையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பௌத்த மதத்தை வாழ்க்கையில் முன்னிலைப்படுத்தக் கூடிய செயற்பாடுகளைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியுள்ளோம். எதிர்க் கட்சியின் சிலர் கூறுவது போன்று, அரசியல் யாப்பில் உள்ள எழுத்துக்களினால் மாத்திரம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை.

இன்று பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுபவர்கள், இந்த அரசாங்கத்தை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதில்லையெனக் குற்றம்சாட்டுகின்றனர். இதன் கருத்து கடந்த அரசாங்கத்தில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பதாகும். கடந்த காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் பௌத்த மதத்துக்காக எதனைச் செய்தார்கள் என்பதை பொதுவாகவே கேள்வியாக எழுப்புகின்றேன்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விகாரைகளையாவது கட்டியுள்ளனரா? பௌத்த மதத்துக்கு அதிகாரம் உள்ள போது எதனையும் செய்யாமல் இருந்துவிட்டு, அதிகாரம் இழந்து எதிர்க் கட்சிக்குப் போன பின்னர் பௌத்த மதத்தை தூக்கிப் பிடித்துப் பேசுவது பொருத்தமற்ற செயலாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here