பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் காலாவதியாகின்றது.
இந்நிலையில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவிடம் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இருதரப்புக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களே இணக்கப்பாடொன்றை எட்ட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.
அவர்கள் இணக்கப்பாடொன்றுக்கு வராத சந்தர்ப்பத்தில், அமைச்சு என்ற ரீதியில் தலையீடு செய்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் தேயிலை தொடர்பில் கடந்த முறை பாரிய பிரச்சினையொன்று காணப்பட்டது. அதன் காரணமாகவே பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்பட்டது. அதனாலேயே அரசாங்கம் என்ற ரீதியில் தலையீடு செய்தோம். இம்முறை அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளன. அதனால் நியாயமான தீர்வை எட்ட முடியும் என எண்ணுகின்றோம்
என அமைச்சர் ரவீந்திர சமரவீர மேலும் தெரிவித்தார்.