புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இன்று மீண்டும் கூடியது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆறு உறுப்பினர்கள் இணைந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளதுடன், மேலும் இருவர் இணைந்து மற்றுமொரு அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இதில் தலையீடு செய்வதாக தற்போது அதிருப்தி வௌியிடப்பட்டுள்ளது.

சுயாதீனமாக தமது கடமையை நிறைவேற்ற இடமளிக்குமாறு நிபுணர் குழு அவர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்த போது, பிரதான செயற்பாடுகளை கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவே முன்னெடுத்தார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு அதிகளவில் ஆர்வங்காட்டிய இவர்கள், பிரதமரை இலகுவில் நீக்க முடியாதளவில் சரத்துக்களை உள்ளடக்கினர்.

ஊடகவியலாளர்களை சிறையிலடைப்பதற்கான இடமுள்ள சரத்தை, 19 ஆவது அரசியலமைப்பில் உள்ளடக்கிய போதிலும், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய அது தடுக்கப்பட்டது.

தற்போது எந்த நோக்கத்திற்காக புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டிற்குள் இவர்கள் தலையீடு செய்துள்ளனர்?

தமிழ் மற்றும் ஆங்கில பிரதிகள் இல்லை என எம்.ஏ.சுமந்திரன் கூறியமையினால், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டாதுள்ளது.

அது மாத்திரமல்ல, பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய வங்கியின் ஊழியருக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமந்திரன் ஆஜரானார்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமிக்க விடயமான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் தலையீடு செய்வது தொடர்பில் மக்கள் விழிப்புடன் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here