அதிகாரம் மற்றும் ஊழலுக்கிடையிலான தொடர்பை இல்லாதொழிப்பதற்கு கடந்த 3 வருடங்களுக்குள் இலங்கையில் முக்கிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜியாவின் Tbilisi மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடைமை தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
திறந்த அரசாங்கப் பங்குடைமையானது பிரஜைகளுக்காக அரசாங்கத்தின் வௌிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறை ஆகும்.
திறந்த அரசாங்கப் பங்குடைமையை உறுப்பு நாடுகளின் நலன்புரி விடயங்கள் மற்றும் நன்மைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துரையாடப்பட்டது.
தாம் பதவியைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் வரையறையற்ற அதிகாரங்கள் இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் காணப்பட்டதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.