சாட்சியங்களுக்கு அமைய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மரணதண்டனை விதித்ததாக சட்ட மா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மரணதண்டனைக்கு எதிராக துமிந்த சில்வா தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை இன்று ஆராய்ந்தபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரைக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கு, மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை விதிப்பதற்கு நீதிபதிகள் இருவர் தீர்மானித்தனர்.
இந்தத் தீர்ப்பு தொடர்பில் துமிந்த சில்வா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, பிரதம நீதியரசர் பிரய சாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே இன்று மேலும் விடயங்களை முன்வைத்தார்.
குறித்த குற்றச்செயலுக்கு முன்னர் இடம்பெற்ற அனைத்து சம்வங்களுக்கும் துமிந்த சில்வா தலைமை தாங்கியுள்ளமை, முறைப்பாடு முன்வைத்த சாட்சியங்களின் ஊடாக தௌிவாகுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் சுட்டிக்காட்டினார்.
குறித்த மேன்முறையீடு தொடர்பில் தொடர்பிலான மேலதிக விசாரணையை இம்மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.