இலங்கையில் நாளொன்றில் சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையில், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளிர் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தியர் லெனரோல் கருக்கலைப்புக்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது. குடும்பத்திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் சஞ்சீவ கொடகந்த கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டுள்ளார்.