மன்னார் – ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் பதுங்கி நின்ற மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறித்த நபரை துரத்திச் சென்றுள்ளனர்.
இதில் 54 வயதுடைய இரு பெண் பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் இராஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் குறித்த குடும்பஸ்தரை நிறுத்தியுள்ளனர். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற நிலையில் பொலிஸார் அவரை துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது குடும்பஸ்தர் பயணித்த மோட்டர் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த குடும்பஸ்தர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் வீதிபோக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.