கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுத்தை புலியானது இராணுவத்தினரால் வளர்க்கப்பட்டது என்ற தகவலொன்று கசிந்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் பகுதிக்குள் சிறுத்தை புலியொன்று நுழைந்த நிலையில் கிராமவாசிகள் அதனை காட்டிற்குள் துரத்த முயற்சித்துள்ளனர்.
இதன்போது சிறுத்தை மனிதர்களை தாக்கிய நிலையில் இது தொடர்பில் பிராந்திய வன ஜீவராசி காரியாலயத்திற்கும், பொலிஸாருக்கும் கிராம மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
அங்கு வந்த வனஜீவராசி காரியாலய அதிகாரிகள் புலியை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட போதும் அது தோல்வியுற்றது. அவர்கள் அங்கிருந்து செல்ல மீண்டும் ஊருக்குள் தலைகாட்டிய சிறுத்தை புலி மக்களால் தாக்கி கொல்லப்பட்டது.
இந்த சம்பவமானது மனிதர்களால் சிறுத்தை புலிக்கு நேர்ந்த கொடூரம் தான். இருப்பினும் ஒரு சில விடயங்கள் இந்த சிறுத்தை புலிக்கு பின்னாலுள்ள திட்டமிட்ட சதியை எடுத்து காட்டி நிற்கின்றன.
அதன்படி சிறுத்தை புலியானது மீண்டும் தாக்கும் என்பதால் தான் வன ஜீவராசி காரியாலய அதிகாரிகள் முயற்சியை கைவிட்டனர்.
எனினும் எவ்வளவு கொடிய விலங்கினையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில் குறித்த அதிகாரிகள் அந்த முறையை கையாளாமையானது இது திட்டமிட்ட சதியே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன் குறித்த பகுதிக்கு வந்த இராணுவத்தினர் என்னவென்று கூறாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த சிறுத்தை புலியானது இராணுவத்தினரால் வளர்க்கப்பட்டதாக இருக்கலாம் எனவும், அதனை தேடியே அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்படியல்லாவிடின் மக்களின் குடியேற்ற பகுதிக்குள் காட்டிலுள்ள விலங்குகளை விரட்டி விட்டு அவர்களை அச்சப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம் என ஒரு தரப்பினரின் ஊகமாக இருக்கிறது.