கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் உள்ளூர் ஏஜெண்டுகளினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசாங்கத்திலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசாங்கத்துக்கு பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயுடன் நேற்று (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.