ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரதெரிவித்தார்.
விசாரணைகளை தொடர்ந்து துரிதமாக முன்னெடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கவும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களுடன் தொடர்புள்ள வழக்குகள் பல வருடங்களின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் கோப்புகள் மறைக்கப்பட்டும் பக்கங்கள் கிழிக்கப்பட்டும் உள்ளன. சில அதிகாரிகள் நாட்டில் கூட இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கொலை, கடத்தல் தாக்குதல் என்பன தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளதா என வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலே சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். இருந்தாலும் விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகள் தொர்பிலான 29 விசாரணைகள் முடிவடைந்து சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதம் இருப்பதாக கூறிய அவர், இதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், விசேட நீதிமன்றங்களை உருவாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் திருடர்களை பிடிக்கவே மக்கள் ஆணை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபர்,இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. சில அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சி.ஜ.டி மற்றும் இளம் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் இந்த விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உச்ச அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.