நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதன்மூலம் நாட்டுக்கு பேராபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசுகையில், “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். மாறாக அதனை இல்லாமல் செய்யக் கூடாது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கப்படுவதானது, நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும். மக்கள் விடுதலை முன்னணியினால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதே தீர்மானத்தைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வைத்து வருகின்றன. அத்துடன், இதற்கு கூட்டு எதிர்க் கட்சியும் தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. எவ்வாறாயினும், அரசியல் ரீதியில் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.