இந்தியா – காஷ்மீரில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட மக்கள் சிறுமி ஆசிபாவுக்கு நீதிகோரியும், சிறுவர்களை பாதுகாக்குமாறும் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். இந்த போராட்டத்தில் சிறுவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிபாவுக்கு நீதிகோரியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு வெளியிட்டும், மோடியின் உருவப்படத்தை வீதியில் போட்டு அதை மிதித்து தமது எதிர்ப்பை மக்கள் வெளியிட்டிருந்தார்கள். இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சிறுமி ஆசிபா கொலை செய்யப்பட்டதைப் போன்றே இலங்கையிலும் வித்தியா மற்றும் சேயா போன்ற சிறுமிகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர். வித்தியா, சேயாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி அமைச்சுக்கு முன்பாக நாம் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதேற்கமைய அந்த கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்  என்று குறிப்பிட்டார்.

கடந்த 13ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் பொலிஸார் உட்பட எட்டு பேரால், 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பல நாட்களாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளனர். சிறுமியின் சடலம் ரஸானா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், சிறுமி ஆசிபாவுக்கு ஆதரவாக உலகளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here