வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னமும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் கொடுக்க முடியாத நிலையில் கூட்டரசாங்கம் இருந்து வருவது கவலைக்குரிய விடயம், இந்த புத்தாண்டிலாவது அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பில் விடுதலைக்கான முன்னெடுப்புகள் இந்த கூட்டரசாங்கத்தினால் முன்னேடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த ஒரு வருடத்தை தாண்டி காணாமல் போனவர்களுக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை ஒரு தீர்வுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது.
தமிழ் மக்களின் வாக்குப் பலத்தைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர்கள் இப்போராட்டத்தை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்துகிறார்களே தவிர இது வரையிலும் இவர்களுக்கான ஒரு தீர்வினைப்பெற்றுக் கொடுக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை உறுப்பினர்களே முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயம், காணாமல் போனோர் தொடர்பிலான விடயம் சாதாரண விடயம் அல்ல, காணாமல் போனோர்களை கண்டறியும் குழுவினை நியமித்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு இருக்கின்ற போதுதான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள், தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலை தொடருமானால் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை உருவாகும். இதை விடவும் மனோரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி இவர்களுடைய குடும்பங்கள் அவ்லோல கல்லோலப்படும் நிலை தோற்றுவிக்கப்படும். அடுத்த புத்தாண்டிற்குள்ளாவது இவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக குறிப்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது சாலச்சிறந்தது.