வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிச்செயற்பட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப்பிரிவினரால் இன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளைப் பெறும் வகையில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்குப் பிரதேச செயலகங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாகப் பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடு வீடாகப் பொருட்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட பாஸ் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்திய வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்படி பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையமொன்று, ஸ்டூடியோ ஒன்று என 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.