இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

ஜோகனஸ்பர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும் ராபடா மற்றும் ஒலீவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கீகன் பீட்டர்சன் 62 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 27 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 240 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹானே 58 ஓட்டங்களையும் புஜாரா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஓலிவர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 240 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும் ராஸி வெண்டர் டுஸன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி, சர்துல் தாகூர் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் டீன் எல்கர் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here