மட்டக்களப்பில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் இவ்வாறு மட்டக்களப்பிலுள்ள விவசாயிகள் நெல் அறுவடைக்காக டீசல் பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருள் விநியோகம்

இந்நிலையில் விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தேசபிரியாவின் ஆலோசனைக்கமைய பெட்ரோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீலின் மேற்பார்வையில் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.

 

ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இன்று(2) வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவிலிலுள்ள 13 விவசாய கண்டங்களில் இருந்து தலா ஒரு விவசாய கண்டத்தில் இருந்து 10 பேர் வீதம் 130 விவசாயிகளில் ஒருவருக்கு 25 லீட்டர் வீதம் என்ற அடிப்படையில் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கென வைக்கப்பட்டிருந்த 3307லீட்டர் டீசல் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

 

கலந்துகொண்டவர்கள்

டீசல் விநியோகிக்கும் நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார, வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த டீசல் விநியோகத்தை வழங்கி வைத்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுடன் இராணுவத்தினரால் விவாசாயிகளுக்கு டீசல் பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகின்றது.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here