திருகோணமலை – மிரிஸ்வெவ பகுதியில் 9 வயதுடைய சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் தாக்குதலினால் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது உடைய ஏ.முகம்மட் ரஸ்லான் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
குறித்த சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 48 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸாருக்கு கூறியதையடுத்து கைது செய்யப்பட்டவருடைய உறவினர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டுக்குச் சென்று மிளகாய்த்தூள் வீசி தாக்குதல் நடாத்தியதாகவும், 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதன்போது 16 மற்றும் 12 வயதுடைய இரு சிறார்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.