காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம். ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் தாங்கள் இணைந்து போராடிய பெரும்பான்மையின சகோதரர்களிடம் குருந்தூர் மலையில் பெளத்த சின்னங்களை நிறுவ முயல்வதற்கு எதிராக குரல் கொடுக்க கோரவில்லையா?

குருந்தூர் மலை விவகாரம்

குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ...! சுரேந்திரன் கேள்வி

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் என்று மூர்க்கமாக குரல் கொடுத்தவர்கள் சிலர் குருந்தூர் மலை விவகாரத்தில் கள்ள மவுனம் காப்பது ஏன்? கைதட்டல் கிடைக்காது என்பதற்காகவா அல்லது காலிமுகத்திடலில் போராடும் பெரும்பான்மை இனத்தின் மனம் நோகக்கூடாது என்பதா? எதற்காக மௌனம் காக்கிறார்கள்?

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ளாத எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இணைந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்கள் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் சென்று சத்தமெழுப்புவதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயல்வது கேலிக் கூத்தாகும். அது இன்று நிரூபணமாகியுள்ளது. ஆகவே தென்னிலங்கையில் நடக்கின்ற அரசியல் அதிகார சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்த இடமளித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.

கடந்த கால அனுபவங்களில் இருந்து , நல்லாட்சி காலம் உட்பட நாம் பாடம் கற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர் தரப்பாக பேரம் பேசுவதே தேவையானது. தமிழ் மக்களுக்கு பயன் தரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றியே நமது தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here