மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த மக்கள் எரிவாயு லொறியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்களில் 250 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட லொறியை எரிவாயுவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை பெறாத பாவனையாளர்கள் லொறியை மறித்து தமக்கு எப்போது எரிவாயு தரப்படும் என உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் வரையிலான மக்கள் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்துள்ளனர். இதில் அன்றைய தினம் எரிவாயு முகவர்களால் 400 பேருக்கு எரிவாயுக்களை வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலைவரை காத்திருந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படும் என அன்று அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்று கொள்கலன்களுடன் மக்கள் காத்திருந்தனர்.
ஆனால் அன்றும் வழங்கப்படாதையடுத்து தொடர்ந்து இரவு பகலாக இன்று திங்கட்கிழமை வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறான நிலையில் இன்று (23) முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயுக்களை வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கினர்.
அதேசமயம் வரிசையில் காத்திருந்த ஏனைவர்கள் எரிவாயுவை பெறாத நிலையில் எரிவாயு தந்தால் தான் லொறி இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியும் என வரிசையில் காத்திருந்த மக்கள் லொறியை வெளியேறிச் செல்லவிடாது மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் ஆர்பாட்டகாரர்கள் எரிவாயு எப்போது தரப்படும் எனவும், வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குமாறும் கோரியும் லொறியை செல்லவிடாது சுற்றிவளைத்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் எரிவாயு முகவருடன் பேசி புதன்கிழமை எரிவாயு தருவதாகவும் அதற்காக வரிசையில் நிற்பவர்களுக்கு இலக்கங்கள் முகவர்களால் தரப்படும் என தலையீடு செய்து உறுதி மொழி வழங்கியதையடுத்து லொறியை அங்கிருந்து செல்ல ஆர்பாட்டகாரர்கள் அனுமதியளித்துள்ளனர்.
எனினும் தற்போதும் அங்கு மக்கள் எரிவாயு கொள்கலனுடன் தொடர்ந்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : கனகராசா சரவணன்
வவுனியா
சமையல் எரிவாயு பெறுவதற்காக வவுனியாவில் இருந்து பூனாவ சென்று நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் எரிவாயு வழங்கும் வகையில் முகவர்கள் ஊடாக சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், வவுனியாவிற்கு நேற்று (21) கொண்டுவரப்பட்ட எரிவாயுவினை திட்டமிட்டபடி மக்களுக்கு சீராக வழங்க முடியாத வகையில் குட்செட் வீதியில் ஒருபகுதி மக்கள் எரிவாயு வாகனத்தினை மறித்து குழப்பம் விளைவித்து எரிவாயுவைப் பெற்றிருந்தனர்.
இதனையடுத்து, எரிவாயுவை தமது கண்காணிப்பின் கீழ் வழங்கும் முயற்சியை வவுனியா பிரதேச செயலகம் இடைநிறுத்தியுள்ளதுடன், எரிவாயு நிறுவனமும் வவுனியாவிற்கு வர முடியாது எனவும் பூனாவ பகுதிக்கு வந்து எரிவாயுவைப் பெற்றுச் செலுமாறு கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று (23) அதிகாலை முதல் பூனாவ பகுதிக்கு எரிவாயுவைப் பெற வவுனியாவில் இருந்து 300 இற்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் 150 பேருக்கு எரிவாயு வழங்குவதற்கான இலக்கங்கள் வழங்கப்பட்டது.
ஆனாலும், மதியத்திற்கு பின்னர் எரிவாயு இல்லை என தெரிவித்து அங்கு நின்ற 300 இற்கும் மேற்பட்ட மக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
அதிகாலை முதல் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு மத்தியில் அங்கு சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்து நின்று விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.
இதனால் மீண்டும் வவுனியாவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.