தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வட மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல முறை மழை பெய்யும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைச் சூழவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை நிலைகள் 1 & 2 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.