தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் – பஜார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் (18) காலை 08 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மற்றும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் – முழங்காவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக மன்னார் புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக மாவட்டத்திலும் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இன்று (18)காலை 11 மணியளவில் மன்முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு உறவுகளை பறிகொடுத்த தாயினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் மலர் தூவி தங்களுடைய அக வணக்கத்தை தெரிவித்தார்கள்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக எந்த ஒரு நீதியான தீர்வும் சர்வதேசத்தாலோ இலங்கை அரசினாலோ இதுவரை கிடைக்கவில்லை என்ற பெற்றோரின் மனக்குமுறல்கள் மகஜராக வாசித்துக் காட்டப்பட்டது.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனிதநேயச் செயற்பாட்டாளர் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.