முள்ளிவாய்க்கால் அதுவொரு மானுடப் பேரவலம், முள்ளிவாய்க்கால் அதுவொரு காலப்பெருந்துயரம்

ஆம் கொத்துக் கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட எம் சொந்தங்களின் குருதி படிந்து சிவந்த நிலமே முள்ளிவாய்க்கால். இற்றைக்கு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தம் இருப்புக்காய் இனத்தின் விடுதலைக்காய் போராடிய ஒரு இனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கொத்துக் குண்டுகளுக்கும் எறிகணைகளுக்கும் இரையாக்கப்பட்ட தினமே மே 18 .

இதனாலேயே முள்ளிவாய்க்கால் மண்ணும் மே 18ம் ஈழத்தமிழர் வாழ்வில் இருந்து மறக்கவும் மன்னிக்கவும் முடியாத ஒன்றாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

அண்டை நாடு முதல் ஐநா சபை வரை வேடிக்கை பார்த்து நிற்க சிங்களப் பேரினவாதத்தின் கொடுகுர வன்செயலால் பிஞ்சுக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை குரல்வளை நசிக்கப்பட்டும் உயிரோடு புதைக்கப்பட்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டிருந்தனர் .

இத்தனைக்கும் அவர்கள் கேட்டது அவர்கள் நிலம் அவர்களுக்கு வேண்டும் என்பதேயாகும். இதை ஏற்க மறுத்த அடாவடி சிங்கள அரசாங்கம் எம் மக்களை மேற்குலகின் துணையோடு இரக்கமே இல்லாமல் அழித்தொழித்தது ‌.

ஆம் அந்த வடுக்கள் எப்போதும் எம்மை விட்டு அகலாதவை. எம் இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் வரை எம்மவர் நினைவுகளும் அவர்கள் சிந்திய குருதியும் எம்முள்ளே ஊற்றெடுத்து பாயும் என்பது மறுக்கமுடியாத ஒன்றே .

இப்பொழுதும் எம் கால்தடம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பதியும் போது எம்மவர் குரல்களும் அங்காங்கே சிதறிக்கிடந்த எம் சொந்தங்களின் உடலங்களுமே கண்முன் தோன்றி நிற்கும். ஏன்னென்றால் குண்டுமழையும் குருதிவெள்ளமும் அவலக்குரல்களும் மாத்திரமே இறுதியில் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சொந்தமாய் போனது.

மேற்குலகின் உதவியுடன் அதி நவீன ஆயுதங்களை இரக்கமே இல்லாது முள்ளிவாய்க்கால் மண் மீது சிங்கள இனவெறி அரசு ஏவிவிடும். சிங்கள கடையாரின் காட்டுமிராண்டித்தனத்தோடு பாய்ந்து வருகின்ற ஒவ்வொரு ஏவுகணையும் எம்மவர் பலநூறு பேரை கிழித்தெறிந்து விட்டுத்தான் முள்ளிவாய்க்கால் மண்ணை துளையிடும்.

அம்மா இல்லாது பச்சிளம் குழந்தை வீரிட்டு அழும், கட்டிய காதல் கணவன் உடல் சிதறிக்கிடக்க பித்துப்பிடித்தது போல் குழறிக் குழறி அழுவாள் மனைவி, தவமிருந்து பெற்ற பிள்ளை கண்முன்னே துடிதுடித்து இறந்துபோக செய்வதறியாது கதறி அழுவாள் அன்னை, இத்தனை அவலமும் ஒரே நேரத்தில் நிகழ முள்ளிவாய்க்கால் மண்ணே அமைதியிழந்து போயிருக்கும்.

ஏவிய ஏவுகணைகளும் துப்பிய தோட்டாக்களும் பாய்ந்த எம் மண் வெப்பம் தாங்காது கொதித்துக் கொண்டிருக்கும். இன்னமும் அந்த வெப்பம் அடங்காமல் தான் இருக்கின்றது‌.

ஆம் இது எம்மவர் மாதம், துடித்துடித்து இறந்து போன எம்மவர் கதை கூறும் வைகாசி மாதம், சொந்தங்களின் வருகைக்காய் ஏங்கி கிடக்கும் முள்ளிவாய்க்கால் மண் புத்துயிர் கொள்ளும், எம்மவருக்காய் பூ பூக்கும், கடல் கொந்தளிக்கும், மேகம் இருள் சூழும், தியாகத் தீ அணையாது எரியும். அவர்கள் சிந்திய குருதியும் எழுப்பிய ஓலமும் மெதுவாய் எம்மை உரசிச்செல்லும். ஆம் இவையனைத்தும் அவர்கள் இன்னமும் அங்கேதான் இருக்கின்றார்கள் என்பதற்கான அறிகுறி‌.

மறப்போமா இவர்களை, மன்னிப்போமா அவர்களை! முள்ளிவாய்க்கால் வாருங்கள் எம்மவர்கள் எம் காதோரம் பல கதை பேச காத்திருப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் அதுவொரு மானுடப் பேரவலம்!

முள்ளிவாய்க்கால் அதுவொரு மானுடப் பேரவலம்!

முள்ளிவாய்க்கால் அதுவொரு மானுடப் பேரவலம்!

முள்ளிவாய்க்கால் அதுவொரு மானுடப் பேரவலம்!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here