யாழ்ப்பாணம் – மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தினையடுத்து பொலிஸாரின் தலையீட்டுடன் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவமானது நேற்று(11) இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெட்ரோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் , அங்கு கூடிய மக்கள் தமக்கும் பெட்ரோல் தருமாறு கோரிய போது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸார் மூவர் தமக்கு பெட்ரோல் நிரப்ப ஊழியர்களிடம் கேட்ட போது , அவர்களுக்கு பெட்ரோல் வழங்க ஊழியர்கள் தயாராகியுள்ளனர்.

இதனையடுத்து “மணித்தியால கணக்காக காத்திருக்கும் எமக்கு பெட்ரோல் இல்லை எனக் கூறிய நீங்கள் , பொலிஸாருக்கு பெட்ரோல் வழங்க எங்கிருந்து பெட்ரோல் வந்தது ? அவர்களுக்கு பெற்றோல் அடித்தால் எமக்கும் அடிக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

இதனால் பெட்ரோல் நிரப்ப வந்த மூவரில் இரு பொலிஸார் அங்கிருந்து சென்ற போதிலும் , ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மட்டும் தனக்கு பெட்ரோல் அடிக்க வேண்டும் என ஊழியர்களிடம் கண்டிப்பான குரலில் கூறியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களின் குழப்ப நிலைமை காரணமாக ஊழியர்கள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பெட்ரோல் வழங்க தயங்கிய போது , குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ” எனக்கு அடிக்க முடியாத பெட்ரோல் இங்கே யாருக்கும் அடிக்க கூடாது” என கோபத்துடன் கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here