நாட்டில் நடைமுறைப்படுத்தபட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்று வட்டத்திற்கு முன்பாக தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது “அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கு ஒடுக்குமுறையை உடன் நிறுத்து” எனும் தொனிப்பொருளில் தீப்பந்தம் ஏற்றியவாறு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர கருத்து தெரிவித்ததாவது,

“நாட்டில் இறக்குமதி முற்று முழுதாக தடைபட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புமாறும், ஊழல் மிக்க அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் எனவும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் தமது பொறுப்புகளை தட்டிக் கழிப்பது கவலையளிப்பதாக உள்ளது.

நாளுக்கு நாள் பொதுமக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்த ஒரு அளவீடும் இல்லாமல் கண்ணீர்ப்புகை விசுதல் மற்றுமல்லாது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுகின்றமை என்பன நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது எனவும் இதனைத் தவிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி இன்னமும் இந்த மக்களை நோகடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதை ஒருபோதும் தேசிய மக்கள் முன்னணி என்ற வகையில் அனுமதிக்க முடியாது” எனவும் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்களின் கண்களை கட்டி அரசாங்கத்தை தக்கவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமெனவும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் எனவும், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை உடன் நீக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here