கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனடிப்படையில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இந்த விசேட சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக தெரியவந்திருந்தது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் வீரசுமன வீரசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வருகை தந்தவண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இதுவரையில் வருகை தந்துள்ளனர்.