மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி அட்டை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் பல இடங்களிலும் பரீட்சிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தற்போது மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மீராவோடை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இதுவரையில் 39510 சினோபாம் தடுப்பூசியும், 160 அஸ்டாசெனிக்கா தடுப்பூசியும், 11286 பைசர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கோவிட்-19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் எனச் சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடு பூராகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.