ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா திரிபும், நான்கு அல்பா திரிபுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபுகள் இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 193 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நான்கு மரணங்களும் ஏற்றப்பட்டுள்ளன.
இதில் 10 வயது சிறுவன் ஒருவன் வவுணதீவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக வயது குறைந்த மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறும் அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த பணிப்பாளர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.